தமிழ்மொழி என்பது எண்ணத்தில் எழும் கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படும் ஒரு கருவி மட்டுமல்ல, அம்மொழி பேசுபவரின் அடையாளம். அது மக்களின் கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கும் சாதனம் மற்றும் மக்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ள பிணைப்பு.
மனித ஆற்றலை வழங்குவதிலும் ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்துவதிலும் மொழி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இவ்வுலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மொழிகளுள் செம்மொழியாக சிறப்புற்று விளங்குகின்ற மொழி தமிழ்மொழி.
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு
முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி”
என்னும் வரிகளில் இருந்து தமிழ்மொழியின் தொன்மையை நாம் அறியமுடிகிறது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியாரும்,
“தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்று புரட்சிக்கவி பாரதிதாசனும் தமிழின் இனிமையைப் பற்றி போற்றுகின்றனர்.
தமிழ்மொழி மிகுந்த சொல்வளமும் கருத்துச்செறிவும் அடங்கியுள்ள மொழியாகும்.மனதை நெகிழவைத்து, உருகுவதற்கு தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. மற்ற மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்க்க இயலும். ஆனால், தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழிபெயர்க்க இயலாது.
பழைமைக்கு பழைமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு மட்டுமல்லாது, புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ்மொழியாகும்.
‘மாடு கிழமானாலும் பால் புளிக்காது’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!. அப்பழமொழியின் பொருள்போல் தமிழ் எவ்வளவு பழைமை வாய்ந்திடினும் இனிமை குன்றாத மொழியென்பதில் சிறுதும் ஐயமில்லை.
“தமிழ்” என்னும் சொல் முதன்முதலில் காணப்பெறும் நூல் தொல்காப்பியமாகும்.
“தமிழென் கிளவி”,”செந்தமிழ் நிலத்து” என வரும் நூற்பாத் தொடர்களில் இவ்வுண்மையைக் காணலாம். பனம்பாரனார் தம் தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் “தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொடரும் தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுவனவாம். “தமிழ் வையைத் தண்ணம் புனல்” என எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடல் தமிழின் இனிமையைக் கூறுகின்றது.
செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் . இவ்வாறு தமிழின் சிறப்புகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இச்சிறப்புமிகு தமிழ்மொழியை வெறும் ஏட்டளவிலும் பேச்சளவிலும் மட்டுமல்லாமல்,
அடுத்தத் தலைமுறையினரான மாணவர்களுக்குச் சரியான முறையில் எடுத்துச்செல்லுதல் அவசியம். தமிழ்மொழி - பாடத்தை வெறும் பாடமாக மட்டும் பயிலாமல், மிகுந்த ஆர்வத்துடனும், மாணவர்களின் கேட்டல், படித்தல், எழுதுதல், பேசுதல் மற்றும் சிந்தனைத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைந்திருத்தல் அவசியமாகிறது.
அதன் அடிப்படையில், மாணவர்களின் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வகுப்பறை செயல்பாடுகளை திட்டமிட்டு முறைப்படுத்த வேண்டும்.
வெவ்வேறு பாட பொருள்களைப் படிக்கவும். அவற்றை குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல் வேண்டும்.
ஒன்றை படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்தலும், கருத்துக்களை தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறியவேண்டும்.
தான் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த நடையில் வெளிப்படுத்துதல் வேண்டும். தாங்கள் படித்தவற்றை பற்றிச் சிந்தித்து, அவற்றின் மீது வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல் வேண்டும்.
தாங்கள் வாழும் சமூகம் அல்லது நாட்டுப்புற இலக்கியங்கள், பாடல்கள் பற்றிக் கலந்துரையாடி, அவற்றின் நயம் பாராட்டுதல் வேண்டும்.
பல்வேறு கலைகளில் ( கைத்தொழில், கட்டடக்கலை, உழவுத்தொழில், நாட்டியம் போன்றவை) பயன்படுத்தப்படும் சொற்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டு, அவற்றைப் புரிந்து கொள்ள முயலுதல்.
மழைக்காலங்களில் பசுமையான சூழலை ஏற்படுத்துதல் போன்ற இயற்கை சார்ந்த தலைப்புகள் அல்லது பிரச்சினைகள் தொடர்பாக தங்கள் தர்க்கவியல் முடிவுகளை அளித்தல்.
வெவ்வேறான உணர்ச்சிகரமான பாடப்பொருள் அல்லது பிரச்சனைகள் மீது காரணகாரிய அடிப்படையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினை கூறுதல்.
பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து, அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடி கண்டறிதல். படித்தவற்றைப் பற்றி சிந்தித்து வினாக்கள் எழுப்பி, அவற்றை மேலும் சிறப்பாக புரிந்து கொள்ள முயலுதல்.
பல்வேறு வகையான செயல்பாடுகளிலும் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள், சொற்றொடர்கள், சொலவடைகள் ஆகியனவற்றையும் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல். பல்வேறு கதைகள் பாடல்களைப் படித்து பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனம் காணுதல்.
படிக்கும்போது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் பொருள்களை புரிந்து கொள்வதுடன் அகராதிகள், பார்வை நூல்கள், வரைபடங்கள், இணையதளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணைகொண்டு, அதன் பொருண்மைகளைத் தெளிவாக அறிதல்.
மொழிப்பாடத்தைக் கற்பிக்கும்போது, மேற்கூறிய செயல்பாடுகளையெல்லாம் பின்பற்றி, மாணவர்களைக் கற்றிலில் ஈடுபடுத்தும்போது, மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பங்கேற்பதுடன் மட்டுமல்லாது, தங்களுடைய திறன்களையும் மேம்படுத்திக் கொள்கின்றனர்.